திண்டுக்கல் பகுதிகளில் நடந்துவரும் குற்றங்களைத் தடுக்க போலீசார் துப்பாக்கியுடன் வாகன சோதனை நடத்திவருவதோடு புள்ளிங்கோ இளைஞர்களைப் பிடித்து எச்சரித்தும் வருகிறார்கள்.
கடந்த 22ஆம் தேதி நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலைக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அதே நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலாவை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் படுகொலை செய்து தலையை வெட்டி பசுபதிபண்டியன் வீட்டுமுன் போட்டுவிட்டுச் சென்றனர்.
இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் ஸ்டீபன் என்ற இளைஞரின் தலையை வெட்டி ரோட்டில் வைத்துவிட்டுச் சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரே நாளில் இரண்டு படுகொலைகள் செய்யப்பட்டு தலைகளை ஆங்காங்கே வீசியது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்துதான் போலீசாரும் அதிரடி வேட்டையில் இறங்கி, இரண்டு கொலைக் குற்றவாளிகளையும் கைது செய்திருக்கிறார்கள். அதேவேளையில், இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், ரவுடிகளின் நடவடிக்கையைக் கண்காணித்துவருகிறார்கள். அதேபோல் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க துப்பாக்கியோடு வலம்வந்து கொண்டும் இருக்கிறார்கள்.
அதன்படி திண்டுக்கல் நகர இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் காதுகளில் கம்மலை மாட்டிக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் முடியை வெட்டிக்கொண்டு, முடியில் கலரிங் செய்திருப்பது தெரிந்தது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், உடனே அவர்கள் காதில் போட்டிருந்த தோடுகளைக் கழட்டச் சொல்லியும், அந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லியும் அனுப்பிவைத்தார். அதோடு புள்ளிங்கோ ஸ்டைலில் சலூன் கடைக்காரர்கள் முடி வெட்டி, கலர் அடிக்கக்கூடாது. மீறி நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலூன் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சலூன் கடை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டமும் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.