திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் யாம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சந்தோஷ் (வயது 15) என்ற மகனும், சௌந்தர்யா (வயது 13) என்ற மகளும் உள்ளனர். முருகேஸ்வரி சிலுக்குவார்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலை செய்யும் பணிக்கு செல்வது உண்டு. இவர்களின் மகன் சந்தோஷ் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகள் சௌந்தர்யா கரியாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், காலை வழக்கம்போல் காய்கறி வியாபாரத்திற்கு நிலக்கோட்டை பகுதிகளில் உள்ள கிராமங்களில் விற்கச் சென்றுள்ளார். அப்போது அவசரமாக வியாபாரத்திற்கு சென்றபோது காய்கறி எடைபோடும் தராசை வீட்டில் வைத்து விட்டுப் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தனது மகன் சந்தோஷுக்கு போன் செய்து காய்கறி எடைபோடும் தராசைக் எடுத்து வந்து கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். சந்தோஷ் நேராகச் சென்று தனது தந்தையிடம் தராசைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
அதன் பிறகு தான் திடீரென மூன்று பேரும் வீட்டை பூட்டிக் கொண்டு வீட்டின் மேற்புறம் அமைத்துள்ள மின்விசிறி கொக்கியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் காட்டுத் தீ போன்று பரவி ஒட்டு மொத்த கிராமமே வீட்டின் முன்பு சோகமாக கூடி நின்று கதறி அழுதனர்.
இந்த விஷயம் நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட்ராஜூக்கு தெரியவே, உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.