திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டி அருகே இருக்கும் பிரபல நர்ஸிங் மற்றும் கேட்ரிங் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இதில் சுமார் 300 மாணவிகள் விடுதியில் தங்கி படித்துவருகின்றனர். இவர்களைக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கல்லூரிக்கு வரும்போதெல்லாம் சில மாணவிகளை அழைத்து அவர்களுக்குத் தொல்லைக் கொடுத்துவந்திருக்கிறார். அதேபோல், இவரின் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவிகளை தனது வண்டியில் அழைத்துச் சென்று அங்கு பாட்டு போட்டு, அவர்களை ஆடச் சொல்லி, பாலியல் தொந்தரவு தந்துவந்திருக்கிறார்.
இதனால் திருப்பூரைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி, தாளாளரின் தொல்லை காரணமாக கல்லூரியில் தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இந்தத் தகவல் சக மாணவிகளுக்குத் தெரியவரவே, ஒட்டுமொத்த மாணவிகளும் இன்று (19.11.2021) காலை 11 மணி அளவில் கல்லூரியிலிருந்து வெளிநடப்பு செய்து, சாலை மறியிலில் ஈடுபட முயன்றனர். அதற்குள் இந்தத் தகவல் காவல்துறையினருக்குத் தெரியவர, அங்கு விரைந்த காவலர்கள் கல்லூரியிலிருந்து மாணவிகள் சாலைக்கு வரும் முன் அவர்களைத் தடுத்து, கல்லூரி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு துணையாக இருந்த விடுதி பெண் காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ய முயன்றனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள், “உடனடியாக தாளாளர் ஜோதிமுருகனை கைதுசெய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து மாணவிகளை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த மாணவிகள் திண்டுக்கல் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தை துவங்கினர். இந்த விவகாரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு தெரியவர, உடனடியாக அப்பகுதிக்கு அவர் விரைந்தார். அங்கு வந்த அவர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார். ஆனால், மாணவிகள், ‘தாளாளர் ஜோதிமுருகனையும், உதவியாக இருந்த பெண் விடுதி காப்பாளரையும் உடனடியாக கைது செய்து எங்களுக்கு காண்பிக்க வேண்டும்’ எனத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்தக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.