தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மழையால் வீடு இடிந்து போனதால் 62 வயது மூதாட்டி தார்ப்பாய் அமைத்து வசித்து வருகிறார்.
கணவனும் இல்லை, பிள்ளைகள் கைவிட்ட நிலையில் வேலம்மாள் என்ற மூதாட்டி அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த அவரது கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மூன்று மகன்களும் கைவிட்டு விட்டனர். வறுமையில் வாடும் இவர், 100 நாள் வேலை, விவசாயக் கூலி வேலைக்கு செல்வதென்று சொந்த உழைப்பிலேயே வாழ்கிறார்.
அண்மையில் பெய்த மழையால் இவரது வீடு இடிந்தது. அதனை சரி செய்ய முடியாமல் தவிக்கும் மூதாட்டி, தார்ப்பாயை வீடு முழுவதும் சுற்றி வைத்துள்ளார். மின் இணைப்பின்றி, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வரும் மூதாட்டி, அரசு பசுமை வீடு கட்டித் தர வேண்டும் என்றும், மாத உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.