![தந்தையை நெஞ்சிலேயே மிதித்துக் கொன்ற மகன்! -தர்மபுரியில் பரபரப்பு!](http://image.nakkheeran.in/cdn/farfuture/PuJmceWxSz9PHKjQ-xY3XnFeie6SphF5mw0OmUIxqzM/1617986579/sites/default/files/inline-images/ASAAS.jpg)
தர்மபுரி அருகே, சொத்துத் தகராறில் தந்தை என்றும் பாராமல் அவரை நெஞ்சிலேயே ஏறி மிதித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமஅள்ளியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (56). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னபாப்பா (50). இவர்களுக்கு அண்ணாமலை (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அண்ணாமலை, லாரி ஓட்டுநராக உள்ளார். இவருடைய மனைவி சுமதி. மகன், மகள் உள்ளனர். அய்யாசாமிக்கு சொந்தமாக 30 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனக்கு பாகம் பிரித்துக் கொடுக்குமாறு அண்ணாமலை அடிக்கடி கேட்டுவந்துள்ளார்.
இப்போதைக்கு சொத்தை பாகம் பிரித்துக் கொடுக்க முடியாது எனத் தந்தை மறுத்து வந்தால், இது தொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு நாள்களுக்கு முன்பு இரவு, அவர்களுக்குள் பாகப்பிரிவினை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அண்ணாமலை, தந்தை என்றும் பாராமல் அய்யாசாமியை கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கியுள்ளார். நெஞ்சில் ஏறி மிதித்துள்ளார்.
இதில், அய்யாசாமி பலத்த காயம் அடைந்தார். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். ஆபத்தான நிலையில் இருந்த அய்யாசாமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார் அய்யாசாமி. தந்தை இறந்ததை அடுத்து அண்ணாமலை திடீரென்று தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்த அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.