தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் லிஸ்டில் உள்ளவர்களைப் போலீசார் கைது செய்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களின் நடமாட்டத்தை ஆய்வுசெய்து போலீசார் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுமாறு மாநில காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளைக் கண்காணித்த போலீசார், அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள அவர்களின் நடமாட்டத்தை தீவிரமாக ஆய்வுசெய்து, அதனடிப்படையில் திண்டிவனம், குயிலாப்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள 13 ரவுடிகளை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருவரங்கம், சாங்கியம், செட்டியந்தாங்கல், கடுவனூர் மல்லாபுரம் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 24 ரவுடிகளிடமிருந்து 7 அரிவாள்கள், 5 இரும்பு ராடுகள் போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பிடிபட்ட 11 பேரில் ஆறு நபர்கள் மீது குற்ற விசாரணை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (26.09.2021) ஒரே நாளில் 37 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆசனூர், திருக்கோவிலூர், திருவரங்கம், சாங்கியம், செட்டியந்தாங்கல், கடுவனூர், மல்லாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் 24 ரவுடிகளை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிடிபட்டவர்களிடமிருந்து 7 அரிவாள், 65 இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.