தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் திரும்புகையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றை கடந்து வர முடியாமல் தவித்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மீட்புப் படையினர் கயிறு கட்டி அதன் மூலமாக பக்தர்கள் அனைவரையும் மீட்டனர்.