தமிழகம் முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது. நாளை (10.04.2021) முதல் இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக திருவிழாக்கள், ஆராதனை கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்த அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு வீசிய முதல் அலையில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகள் முழு ஊரடங்கு அறிவித்து, அதை முழுமையாகவும் செயல்படுத்தின. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய பல திருவிழாக்கள் முழு ஊரடங்கினால் தடைபட்டது. அதில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவும் ஒன்று. இவ்விழாவின் இறுதி நாளில் மாரியம்மனின் தேர்பவனி வருவது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படும். ஆனால் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய தேர்த்திருவிழா கரோனா நோய் தொற்றால் முழுமையாக தடை செய்யப்பட்டது.
இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழா கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்த் திருவிழாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தேர்த் திருவிழா நடைபெறுவது மிக முக்கியமாகக் கருதும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், தேர்த் திருவிழா நடைபெறாமல் போனால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தேர்த் திருவிழா நடைபெறவில்லை என்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்பதால், பொதுமக்கள் இல்லாமல் தேர்த் திருவிழாவை நடத்திவிடலாமே என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.