பேராசிரியை நிர்மலாதேவி பணிபுரிந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது. தனலட்சுமி என்பவர் கடந்த 13 வருடங்களாக அந்தக் கல்லூரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். தன்னைப் பணியில் நிரந்தரமாக்குவதற்காக ரூ.5 லட்சத்தை அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமியிடம் கொடுத்ததாகவும், சொன்னபடி அவர் நடந்துகொள்ளாமல், புதிதாக வந்தவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு, போஸ்டிங் போட்டுவிட்டதாக புகார் வாசிக்கிறார் அவர். இதேரீதியில், மகாதேவி என்பவரும் புலம்புகிறார். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, கல்லூரி வராண்டாவில் இன்று உட்கார்ந்துவிட்டார் தனலட்சுமி. அவரோடு சேர்ந்து கொண்டனர் மகாதேவியும் உறவினர்கள் இருவரும்.
முதலில் நிர்மலாதேவியின் பெயரைக் குறிப்பிட்ட தனலட்சுமி “எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை அவங்க பொண்டாட்டி பிள்ளைகளுக்கு போட்டுக் கொடுத்திருக்காங்க. இது எந்த விதத்தில் நியாயம்? போஸ்டிங் போடலைன்னா, காலேஜ் பேரை அசிங்கப்படுத்திருவேன்.” என்று குமுறலாகச் சொன்னார்.
பழைய கமிட்டி மெம்பர்கள் ராமசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் “தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் வசூலித்த ரூ.36 லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டார் செயலாளர் ராமசாமி. இன்றுவரையிலும், அந்தப் பணத்தை எடுத்துத்தரவில்லை.” என்று குற்றம் சாட்டுகிறார்.
கல்லூரியின் செயலாளர் ராமசாமியோ “போஸ்டிங்குக்கு யாரிடமும் நான் பணம் வாங்கவில்லை. தேவையில்லாமல் என் மீது பழிபோடுறாங்க. சிலருடைய தூண்டுதல்ல இவங்க பிரச்சனை பண்ணுறாங்க.” என்றார். நிர்வாகக் குளறுபடிகளால் கல்லூரியின் பெயர் மேலும் கெடுகிறது என்று வருத்தப்படுகிறது மாணவர்கள் தரப்பு.