
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான ஊர்தி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி முன்னிலையில் நடந்தது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் கலந்து கொண்டு ரத்ததான போக்குவரத்து ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது; “ரத்ததான போக்குவரத்து ஊர்தியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கான ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு அவசரமாக கொண்டு செல்லவும் வெளியிடங்களில் இருந்து ரத்தம் சேகரித்து கொண்டு வரவும் நவீன வசதிகளுடன் ஊர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் மக்கள் பாதுகாப்பாக வசிக்க முடியும். தற்போதைய பாதிப்புகளும் கூட ஆக்கிரமிப்புகளால் தான் நடந்திருக்கிறது. முதலமைச்சர் நீர்நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து “7 பேர் விடுதலையில் தமிழக அரசு நாடகமாடுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளாரே?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “7 பேர் விடுதலையில் நாடகமாடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சட்டப்படி அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துவருகிறார். அந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அதே போல அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து தீர்வு காணப்படும். கூடுதல் நபர்களை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.