அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் ஒருவர் தொடுத்த வழக்கில் மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் மீண்டும் நேற்று வந்த போது, கண்ணையா என்ற முதியவர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானர். இந்நிலையில், இன்று ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் மக்கள் அவர்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதேபோல், இடித்த வீடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் தெருவில் தங்கி சமைத்தும் வருகின்றனர்.