நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்கில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. பதவி ஏற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியான நிலையில் டெல்டா பகுதி உடன்பிறப்புகளும் வாக்களித்த வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
அதாவது அமைச்சரவைப் பட்டியலில் ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7 ல் திமுக கூட்டணியும், திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் மூன்றும், நாகை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் இரண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை திமுக கைப்பற்றியிருக்கிறது.
புதிய அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் பூண்டி எஸ்.கலைவாணன், பட்டுக்கோட்டை கா.அண்ணாத்துரை இவர்களில் மாவட்டத்திற்கு ஒருவராவது அமைச்சராவார்கள் என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புகளிடம் இருந்தது. ஆனால் தற்போது வெளியான பட்டியலில் யார் பெயரும் இடம் பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது, டெல்டா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் கோசி.மணி, தஞ்சை உபயத்துல்லா, திருவாரூர் உ.மதிவாணன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி வகித்தனர். தற்போது டெல்டாவில் ஒருவர் கூட அமைச்சர் இல்லை.
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் டெல்டா மாவட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்றம் சென்றுள்ளனர். அதாவது திமுகவுக்கு எப்போதும் சாதகமான மாவட்டமாக டெல்டா உள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.