தமிழகம் முழுக்க வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பரவலாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாகக் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்து விலை அதிகரித்தது. குறிப்பாகத் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
குறிப்பாக ஈரோடு மார்கெட்டுக்கு தினமும் 7,000 பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் 2,000 பெட்டிகள் மட்டுமே வந்தது. ஈரோடு வ.உ.சி.பூங்கா, நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோவிற்கு ரூபாய் 130 வரை விற்றது. வெளியில் கடைகளில் சில்லறை விலையில் ரூபாய்.150 வரை விற்றது. இதனால் பெண்கள், நடுத்தர மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து 26 ந் தேதி இரவு முதல் அதிகரித்தது.
இதன் காரணமாகத் தக்காளி விலையும் சரிந்தது. 27 ந் தேதி தாளவாடி கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து 10 லாரி லோடு தக்காளி மார்கெட்டுக்கு வரத்தானது. இதனால் 25 கிலோ தக்காளி பெட்டி ரூபாய் 900 முதல் 1000 வரை விற்பனையானது. 14 கிலோ பெட்டி ரூபாய் 400 முதல் 500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை நடந்தது. வெளியிடங்களில் கடைகளில் சில்லறை விற்பனை ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையானது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு போலயே அனைத்து ஊர்களுக்கும் தக்காளி வரத்து அதிகமாக வருவதால் இனி அடுத்தடுத்த நாட்களில் விலை பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.