அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை பொதுக்குழுவில் எழுந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பாதியில் வெளிநடப்பு செய்தார்.
அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது முதலே அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அதோடு, ஒற்றைத் தலைமைக் கொண்டு வரும் வகையில் அதற்கான கோரிக்கை கடிதத்தை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் வெளிநடப்பு செய்தார். அப்போது, மேடையின் மறுபுறத்தில் இருந்த மைக்கில் பேசிய வைத்திலிங்கம், "இது சட்டத்திற்குப் புறம்பானது" என்று கூறி வெளியேறினார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் திடீரென ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது தண்ணீர் பாட்டிலை வீசினார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரைச் சிலர் சூழ்ந்துக் கொண்டதால், பதற்றம் தொற்றியது. பின்னர், தனது பரப்புரை வாகனத்தில் ஏறி ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், "அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்வு செல்லாது. அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவில் நீதிமன்ற ஆணை மீறப்பட்டுள்ளதால் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்.
தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதன் மூலம், பொதுக்குழுவே செல்லாதாகிவிட்டது. பொதுக்குழுவில் இன்று கத்தியவர்கள் உறுப்பினர்களே இல்லை. கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்கள். பதவி வெறியில் நடந்த இது பொதுக்குழு அல்ல; அரை மணி நேரம் நடந்து முடிந்த ஓரங்க நாடகம். கூட்டுத் தலைமைக்கு ஒப்புக் கொண்டால் சமாதானத்திற்குத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினர் இன்று (23/06/2022) இரவு டெல்லிக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டியன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் டெல்லி செல்லவுள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் கூறுகின்றனர்.