மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.
அத்துடன், அவர்களின் சொந்த செலவில், அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாக தோற்றுவித்து, அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கான முன்பணமாக, 6 மாதத்திற்கு, 20 லட்சத்து 83 ஆயிரத்தைச் செலுத்துமாறும், காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கும், தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா எனக் கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில், தீபா, தீபக்கிற்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் கடிதத்துக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வேண்டாம் என்றால் நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தீபா, தீபக் தரப்பில் பதிலளிக்க ஏதுவாக, வழக்கு விசாரணை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.