தஞ்சை மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை உடனே அமைக்க வேண்டும் என்கிற போராட்டங்கள் துவங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் கடிதம் எழுதி அனுப்பும் போராட்டத்தை நாச்சியார் கோவிலில் நடத்தியுள்ளனர் போராட்டக்குழுவினர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினை பிரித்து நாகை மாவட்டமும், பிறகு திருவாரூர் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை மாவட்டமாக்க வேண்டும் என்கிற நீண்ட காலப்போராட்டத்திற்கு பிறகு கரோனா ஊரடங்கு சமயத்தில் சத்தமே இல்லாமல் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மயிலாடுதுறை மாவட்டமாக அறிவித்ததோடு சரி அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை என்கிற கவலை மயிலாடுதுறை பகுதி மக்களிடம் எழுந்துள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுத்திருக்கிறது.
''சுமார் 25 ஆண்டுகளாக கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுவருகிறது. மாவட்டம் அமைக்கதக்க அனைத்து தகுதிகளையும் கும்பகோணம் பெற்றிருக்கிறது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்னகத்தின் கும்பமேளாவான மகாமக பெருவிழா காணும் நகராமாக கும்பகோணம் இருக்கிறது. தஞ்சை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா மற்றும் பெரும் வணிக மையமாகவும் விளங்கிவருகிறது. இதனை காட்டிலும் குறைவான தகுதிகளை கொண்ட பல மாவட்டங்கள் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கும்பகோணத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது தமிழக அரசு.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் சட்டமன்றத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கும்பகோணம் மாவட்டம் அமைப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது என்றார். இருப்பினும் அதன் பிறகும் பல புதிய மாவட்ட அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதிலும்கூட கும்பகோணம் பெயர் இடம் பெறவில்லை. ஒர் ஆண்டு ஆன பின்பும், அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லை, புதிய மாவட்டம் அமையும் வரை போராட்டம் தொடரும்," என்கிறார்கள் போராட்டக்குழுவினர்.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் கடிதம் எழுதி அனுப்பும் போராட்டம் கடந்த 1ம் தேதி கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கியவர்கள், ஜுலை இறுதி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் விதவிதமான தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கோரிக்கையினை வலியுறுத்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.