அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தின் அருகிலுள்ள முந்திரிக்காட்டில் அந்த ஊர் மக்கள் சிலர் தங்கள் ஆடு மாடுகளை வழக்கம்போல் மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றனர். அவர்கள் முந்திரி காட்டுக்குள் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, துர்நாற்றம் வீசியுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் ஏதாவது வனவிலங்குகள் செத்துக் கிடக்கிறதோ என்று எண்ணிய அவர்கள் சுற்றுமுற்றும் சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது ஒரு முந்திரி மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனின் உடல் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருப்பதை கண்டனர். அவரது உடலில் இருந்துதான் துர்நாற்றம் வீசியுள்ளது என்பது தெரியவந்தது.
இதை கண்டு திடுக்கிட்ட அவர்கள், உடனடியாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடு முந்திரி காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இந்த மனிதர் யார்? எந்த ஊர்? அவர் எப்படி இங்கு வந்தார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் பட்டினம் குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த அருள்நாதன் என்பவரது மகன் சின்னப்பன் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தன்னந்தனியாக இங்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது தற்கொலையா? கொலையா? என்பது தெரியவரும் என்கிறார்கள் காவல்துறையினர்.