சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 50 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (international Tech Park) அமைத்துள்ளது. இந்த பூங்காவை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (31.10.2023) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “உலக அளவில், அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில் தான் ‘தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022’-ஐ கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்வோர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்ஸின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் தங்களுடைய புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். யு.பி.எஸ், வால்மார்ட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய குளோபல் கேப்பபிலிட்டி சென்டர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியிருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும். இந்த வேகத்தை பார்க்கின்ற போது 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைவர் மிகுவல் கோ, கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா, இந்திய வணிகப் பூங்காக்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவுரி சங்கர் நாகபூஷணம், மிட்சுபிஷி எஸ்டேட் நிறுவனத்தின் செயல் அலுவலர் மாசநோரி இவாசே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.