தூத்துக்குடி அருகே கடற்கரையில் சிலிண்டர் வெடித்து விசைப்படகு, கன்டெய்னர் லாரி எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தால் ரூ.1.5 கோடி மதிப்பலான பொருட்கள் சேதமானது.
தூத்துக்குடி தருவைகுளம் 60 வீடு காலனியைச் சேர்ந்தவர் சூசை அந்தோணி முத்து. இவரது மகன் அந்தோணி ராஜ் வயது 50. இவருக்கு சொந்தமான விசைப்படகு தருவைகுளம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் படகில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் உள்ள டியூபில் ஓட்டை விழுந்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் விசைப்படகு முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
அப்போது விசைப்படகு அருகில் ஒரு கன்டெய்னர் லாரியிலருந்து ஐஸ் கட்டிகளை இறக்கி கொண்டிருந்தனர். சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரு பாகம் கன்டெய்னர் லாரியில் உள்ள டீசல் டேங்கில் பட்டு டீசல் டேங்க் வெடித்ததில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்ததும், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்த படகின் அருகே பல படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில், எரிந்து கொண்டு இருந்த விசைப்படகை மீனவர்கள் கயிறு கட்டி இழுத்து சென்று, சற்று தொலைவில் கடல் பகுதியில் விட்டனர். இதனால் மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதில் விசைப்படகிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகும் எரிந்து சாம்பலானது. மேலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஐஸ் கட்டி ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியும் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் தருவைகுளம் கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.