Skip to main content

வேகத்தை கூட்டிய 'ஃபெங்கல்' புயல்- கட்டுமான நிறுவனங்களுக்கு வெளியான எச்சரிக்கை 

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
weather

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.  இதற்கு 'ஃபெங்கல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் நாளை (30.11.2024) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயல் காற்றழுத்த தாழ்வாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகள் பொய்யாகும் நிலையில் புயல் சின்னம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உருவாகியுள்ள  'ஃபெங்கல்' புயலானது புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக பல்வேறு இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் காரைக்கால், நாகை துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. புதுவையில் ஏழாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே அனைத்து கட்டுமான நிறுவனங்களும் நாளைய தினத்திற்கு முன்னதாக கட்டுமான தளங்களில் இருக்கக்கூடிய கிரேன் உள்ளிட்ட உயரத்தில் உள்ள உபகரணங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் விளம்பர போர்டுகளை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும் அல்லது காற்றினால் விளம்பர போர்டுகள் சாயாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மெட்ரோ தரப்பில் தாழ்வான பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் வாகனங்களை பார்க் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த 'ஃபெங்கல்' புயல் இன்று (29/11/2024) மாலை 6:11 மணி நிலவரப்படி தனது வேகத்தை கூட்டி 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்