கடலூர் அருகேயுள்ள மேற்கு ராமாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அந்த பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் விஷத்தை குடித்து விட்டு மீதி விஷத்தை தனது புத்தகப்பையில் வைத்தார். இதைப் பார்த்த அதே வகுப்பில் படிக்கும் மாணவி அந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் இதுபற்றி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த மாணவன் மற்றும் மாணவியை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவனும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும், அந்த மாணவி தனக்கு தோல்நோய் இருப்பதால் தற்கொலை செய்யப் போவதாக மாணவரிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு மனமுடைந்த மாணவன் தனது காதலி சாவதற்கு முன்பாக தான் சாகவேண்டும் என்று நினைத்து பள்ளிக்கு வந்து விஷத்தை குடித்துள்ளார்.
அதனை பார்த்த அந்த மாணவியும் காதலன் குடித்து விட்டு வைத்திருந்த மீதமுள்ள விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.