Skip to main content

தரமற்ற முறையில் கட்டப்படும் பள்ளியின் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

CUDDALORE DISTRICT SCHOOL BUILDING CONSTRUCTION

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதிக்குட்பட்ட கொடிக்களம் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கொடிக்களம் மற்றும் நெய்வாசல் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும், பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துவிட்டதாலும் அப்பகுதி மக்கள் அப்பள்ளியைச் சீரமைப்பு செய்யக்கோரிக் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 

பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் வாயிலாக, கடந்த ஆண்டு தமிழக அரசு புதிதாகப் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணி நடைபெற்றதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கட்டுமான பணியில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டி வருவதாகக் கூறி ஒப்பந்ததாரர்களைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கட்டிடக் கட்டுமான பணியைத் தடுத்து நிறுத்தினர். மேலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்கள் இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தாமல், சிமெண்ட் கலவை கொண்டு மட்டும் கட்டிடம் எழுப்புவதாகப் புகார் அளித்து, தரமான கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

CUDDALORE DISTRICT SCHOOL BUILDING CONSTRUCTION


அதன்பின்பு ஊர் முக்கியஸ்தர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்ததின் பேரில் தரமாகக் கம்பிகள் போட்டுக் கட்டித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் மீண்டும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தாமல் தரமற்ற முறையில் சிமெண்ட் கலவையைக் கொண்டு கட்டுமான பணி நடைபெற்று வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தி, பள்ளிக்கட்டிடம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தரமற்ற முறையில் கட்டிடம் கட்டுவதை  ஒப்பந்ததாரர்கள் கைவிட வேண்டும். பள்ளிக் குழந்தைகள் படிக்கும் கட்டிடத்தைத் தரமான முறையில் கட்டித் தரவேண்டும்" எனத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.