கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதிக்குட்பட்ட கொடிக்களம் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கொடிக்களம் மற்றும் நெய்வாசல் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும், பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துவிட்டதாலும் அப்பகுதி மக்கள் அப்பள்ளியைச் சீரமைப்பு செய்யக்கோரிக் கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் வாயிலாக, கடந்த ஆண்டு தமிழக அரசு புதிதாகப் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணி நடைபெற்றதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கட்டுமான பணியில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டி வருவதாகக் கூறி ஒப்பந்ததாரர்களைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கட்டிடக் கட்டுமான பணியைத் தடுத்து நிறுத்தினர். மேலும் கட்டுமான பணியில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்கள் இரும்பு கம்பிகளைப் பயன்படுத்தாமல், சிமெண்ட் கலவை கொண்டு மட்டும் கட்டிடம் எழுப்புவதாகப் புகார் அளித்து, தரமான கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்பின்பு ஊர் முக்கியஸ்தர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்ததின் பேரில் தரமாகக் கம்பிகள் போட்டுக் கட்டித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் மீண்டும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தாமல் தரமற்ற முறையில் சிமெண்ட் கலவையைக் கொண்டு கட்டுமான பணி நடைபெற்று வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரும் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தி, பள்ளிக்கட்டிடம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. தரமற்ற முறையில் கட்டிடம் கட்டுவதை ஒப்பந்ததாரர்கள் கைவிட வேண்டும். பள்ளிக் குழந்தைகள் படிக்கும் கட்டிடத்தைத் தரமான முறையில் கட்டித் தரவேண்டும்" எனத் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தனர்.