மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட 9 இடங்களில் விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், புவனகிரி உட்பட 9 இடங்களில் அனைத்து விவசாய சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அகில இந்திய விவசாய சங்க போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், திமுக நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். 9 இடங்களில் மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.