கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று (29/06/2020) வரை 1,040 ஆக உள்ளது. இவர்களில் 640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விருத்தாசலத்தில் உள்ள பிரபலமான துணிக்கடையில் பணிபுரிந்த இருவர் கரோனா நோய்த் தொற்றால் பலியானதால் அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே உள்ள வசந்தா டெக்ஸ்டைல்ஸ் என்ற அந்தத் துணிக்கடையில் 50- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இக்கடையில் பணியாற்றி வந்த திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 53) என்பவர், கடந்த 27- ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இறப்புக்குப் பின் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா இருப்பது உறுதியானது. அதேபோல் அக்கடையில் பணியாற்றிய மற்றொரு ஊழியரான தில்லை நகரைச் சேர்ந்த நாகராஜ் (வயது 63) என்பவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா நோய்த் தாக்கத்தால் இறந்துள்ளார். இருவரின் பரிசோதனை முடிவுகள் நேற்று (29/06/2020) மாலை மாவட்ட நிர்வாகத்திடம் கிடைத்துள்ளது.
அதையடுத்து நேற்றிரவு (29/06/2020) அந்தத் துணிக்கடைக்கு வட்டாட்சியர் கவியரசு, காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பிரபலமான துணிக்கடையில் பணியாற்றிய இருவர் கரோனாவால் உயிரிழந்த தகவல் வெளியானதால் பொதுமக்களிடையே பீதி உருவாகியுள்ளது. மேலும் கடந்த பத்து தினங்களாக அந்தத் துணிக்கடைக்கு வந்து சென்றவர்கள் விவரம் கண்டறிய சி.சி.டி.வி கேமரா பதிவை விருத்தாசலம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் கைப்பற்றி நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த பெண் மருத்துவருக்கு நேற்று (29/06/2020) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. அதேசமயம் கடலூர் பொதுப்பணித்துறையில் கட்டிட பிரிவில் பணியாற்றிய அதிகாரி தலைமையில் 6 பேர் கடந்த வாரம் வேலூருக்கு ஒப்பந்தப் பணிகள் தொடர்பாகச் சென்று திரும்பியுள்ளனர்.
அவர்களில் கரோனா அறிகுறி தென்பட்ட மூன்று பேருக்கு பி.சி.ஆர். சோதனையில் நேற்று (29/06/2020) தொற்று உறுதி செய்யப்பட்டது. மூன்று பேருக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டதால் அவர்களுடன் சென்ற மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அச்சப்படும் அலுவலக ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மூடி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.