கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, கம்மாபுரம் கீழ் வெள்ளாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறந்து வைத்து ரூ.5 லட்சம் மதிப்பிளான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கான 130 படுக்கைகள்கொண்ட அறைகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம், பாதுகாப்புகள் குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
முன்னதாக விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை சந்தித்து சமூக இடைவெளியுடன் அமர வேண்டும், முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தி முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசங்களை கொடுத்தார். மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தமிழக அரசின் உத்தரவின்பேரில், இருக்கைகளில் கொடுக்கப்பட்ட நம்பர்களில் மட்டும்தான் பயணிகள் அமர வேண்டும் என்றும், அதை தவிர்த்து பயணிகளை அதிகளவு ஏற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டார். பின்னர் ஜங்ஷன் சாலையில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இளைஞர்கள் முகக்கவசங்கள் அணியாமல், ஒன்றாக இருசக்கர வாகனத்தில் வந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர், அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தபின்பு முகக்கவசங்களை அணியும்படி உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை வைரஸ் தொற்று பரிசோதனை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 350 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 ஆயிரத்து 199 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 9 ஆயிரம் நபர்கள் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,750 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தை பொறுத்தவரை கூடுதலாகவும், போதுமான வசதியுடன் வைரஸ் தொற்றுக்கான படுக்கை அறை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வைரஸ் தொற்று பற்றி அனைத்து பொதுமக்களும் விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கையுடனும் சமூக இடைவெளியுடனும் இருக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளிலும், ஆட்டோ மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார்.