குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "வேளாண்மையில் ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மீண்டும் வளமாக்க வேண்டும். இதன் மூலம் நஞ்சற்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்க முடியும்.
குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப அங்கக இடு பொருட்களான திரவ உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து மண் வளம் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். இதனால் ரசாயன உரங்களின் இறக்குமதியும் பயன்பாடும் குறையும். உயிர் உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது. தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்கள் 25% சேமிக்கப்படுகிறது.
மாசற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துகிறது. இயற்கை வழி பண்ணையம் ஊக்குவிக்கப்படுகிறது. மகசூல் 15% முதல் 20% வரை அதிகரிக்கிறது.
கடலூர் உயிர் உர உற்பத்தி மையத்தில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பயிர்வகைகள் மற்றும் மணிலாவுக்கு ரைசோபியம், அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, நெல் மற்றும் இதர பயிர்களுக்கு அசோஸம் உள்ளிட்ட எட்டு வகையான உயிர் உரங்கள், ஆண்டுக்கு 50,000 லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தனியாரை விட குறைந்த விலையில் அதிக தரத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றன.
உலகத்திலேயே முதன் முறையாக திரவ உயிர் உர உற்பத்தியில் அதி நவீன தொழில்நுட்பமான நுண்ணிய குழாய் வடிவ உறைத்தொகுதி கொண்டு உயிர் உர பாக்டீரியாக்களை பிரித்து ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்திற்கு 100 மில்லியன் பாக்டீரியாக்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கும் பொருட்களை சேர்த்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திட உயிர் உரத்தை காட்டிலும் நூறு மடங்கு அதிக பாக்டீரியாக்களை கொண்டது. எடுத்துக்காட்டாக ஏக்கருக்கு 200 கிராம் கொண்ட 46 பொட்டலங்கள் கரும்பு பயிருக்கு உயிர் உரங்களை இடுவதால் கிட்டும் பயன், அதற்காகும் செலவான 276 ரூபாயில் திரவ உயிர் உரம் கொண்டு 112 ரூபாய் பெறலாம்.
ஆகவே, திரவ உயிர் உரங்கள் உயிர் உரங்களை காட்டிலும் நுண்ணுயிர் அளவு, காலாவதி காலம், செலவு, பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்கும். ஆகவே குருவை, சொர்ணவாரி மற்றும் காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.