கடலூர் மாவட்டத்திலிருந்து டெல்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்த 13 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 7- ஆம் தேதி கரோனா தொற்று காணப்பட்ட 40 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 6 பேரின் பரிசோதனை அறிக்கை நேற்று (10/04/2020) வந்தது. அதில் விருத்தாசலத்தைச் சேர்ந்த, டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த ஒருவரின் உறவினர் குழந்தையான மூன்று வயது பெண் குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தையையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 6 பேருக்குத் தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் முதன்மைத் தொடர்பில் இருந்த 73 பேர், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 19 பேர் என மொத்தம் 92 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 90 பேரின் உமிழ்நீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் இதுவரை 11 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை. ஆனால் ,இன்னும் 79 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என மொத்தம் 206 பேர் மாதிரிகள் சேகரித்து இதுவரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 102 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. அவர்களில் 14 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதும், 88 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இவர்களைத் தவிர இன்னும் 104 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.