கடலூர் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. இதனுடன் சேர்த்து மொத்தம் எண்ணிக்கை 356ஆக உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்து கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக கடலூர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் 51பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் 105 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 64 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 17 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 32 பேர் என சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது இல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் முகாம் அமைத்து அங்கும் தங்க வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி முகாம்களில் தங்க வைத்துள்ள நபர்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை என்று நொந்து போயுள்ளனர் அதிகாரிகள். தொழுதூர் தனியார் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் என அனைத்து வசதிகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் சிலர் அதிகாரிகளை நோகடித்து வருகிறார்கள் .
கல்லூரியில் உள்ள குடிநீர் பைப் லைன்களை உடைப்பது குடிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள மினரல் வாட்டர் தண்ணீரில் குளிப்பது, துணி துவைப்பது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் அப்படித்தான் செய்வோம். எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள். நாங்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களா? இங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போல் எங்களை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
இப்படி அதிகாரிகளை கேள்வி கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதோடு நேற்று முகாமில் இருந்த ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி வந்து அதை குடித்துவிட்டு கல்லூரி வளாக முகாமில் தங்கியிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
தகவலறிந்த திட்டக்குடி வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று நேரில் விசாரணை செய்தனர். ரகளையில் ஈடுபட்டவர் லக்கூரை சேர்ந்த முல்லைநாதன் என்ற வாலிபர். இவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததுள்ளதையடுத்து அவரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக ராமநத்தம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் முகாமிலுள்ள அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.