கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்தை எட்டும் கரோனா! பண்ருட்டி அ.தி.மு.க எம்.எல்.வுக்கு கரோனா தொற்று. கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவத் துறையினர், காவல் துறையினர், அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவருகிறது. நேற்று 370 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,512 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கரோனா தொற்று 10 ஆயிரத்தை எட்டிவிடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வமும் ஒருவர். இவரது கணவர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வம் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக எம்.எல்.ஏ. சத்யா புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 50 மையங்கள் கரோனா சிகிச்சைக்காக திறக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் 1,110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் என மாவட்டத்தில் 22 கரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அதேசமயம் கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.