கடலூர் டவுன் டிஎஸ்பியாக பணி செய்து வருபவர் சாந்தி. இவர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு விதமான மாற்றங்களையும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளையும் கச்சிதமான முறையில் கையாண்டு வருகிறார். அதுமட்டுமல்ல தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது கரோனா நோய் பரவாமல் தடுக்கும் விதத்தில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், சமூக ஆர்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் பகுதியில் மட்டும் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் இடைவிடாத பணியை கருத்தில் கொண்டும், அவர்கள் குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகாத வகையிலும் அவர்களுக்கு டிஎஸ்பி சாந்தி தனது சொந்த செலவில் காய்கறிகள், அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
காக்கி சட்டை போட்டவர்கள் கடுமையாக நடந்துகொள்வார்கள் என்பதை மாற்றி காக்கி சட்டைக்குள் ஒரு கருணை மனம் உள்ளது என்பதை, கடலூர் டிஎஸ்பி சாந்தி அவ்வப்போது நிரூபித்து வருகிறார். இவரது செயலைக் கண்டு பொதுமக்கள், காவல்துறை சக அதிகாரிகள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.