கடலூர் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்தி 20 ஆயிரத்து 683 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில், டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட 41 பேர் அடையாளம் காணப்பட்டனர்.அவர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவில் 13 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த பண்ருட்டி கடலூர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி, கரவப்பட்டு ஆகிய பகுதிகளில் ஏழு கிலோமீட்டர் சுற்றளவிற்குத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு இந்நோய் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய ஆயிரத்துத் தொள்ளாயிரத்து 83 சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 1 லட்சத்து 8 ஆயிரத்தி 161 குடும்பங்களைச் சேர்ந்த நாலு லட்சத்து 20 ஆயிரத்தி 683 பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா அறிகுறியுடன் கடலூர் அரசு மருத்துவமனை சிறப்பு பிரிவில் 23 பேர்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 44 பேர்களும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 68 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் என 6 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.இதுவரை 136 நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 87 முடிவுகள் வெளிவந்துள்ளன. 49 பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.இதில் 13 பேருக்கு மட்டும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் பயத்தில் உள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள்.