பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "விழாக்களிலும், பண்டிகைகளிலும், கோயில் திருவிழாக்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசி பகுதியில் தயாராகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள்.
சில மாநிலங்களில் காற்று மாசுபடுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்வு கண்டு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரம் பட்டாசு தொழிலை நம்பியே இருக்கிறது. பாரம்பரியம், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வணிகர் நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தடையை விலக்க வேண்டும். வெளிநாடுகள் அனைத்திலும் பண்டிகைகளில் பட்டாசு வெடிக்க எந்த தடையும் இல்லை.
ஜப்பானில் கரோனா காலத்திலும் வாண வேடிக்கைகள் நடத்தி மக்களிடையே அந்த நாடு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த திருவிழா லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை உண்டாக்கும். எனவே, உரிய அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.