நாகை சி.பி.சி.எல். எனும் பொதுத்துறை நிர்வாகம், நீண்டகாலமக பனிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை மறைமுகமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள பனங்குடியில் அமைந்துள்ளது சி.பி.சி.எல். எனும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனத்தில் பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சி.பி.சி.எல். நிறுவனத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தோடு ஆட்குறைப்பு செய்யம் திட்டமும் வைத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
இந்நிலையில் ஆலை விரிவாக்கத்தை காரணம் காட்டி சி.பி.சி.எல். நிர்வாக அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த 30 நாள் வேலை நாட்களை 15 நாட்களாக குறைத்தும், சம்பளத்தைக் குறைக்கும் வேலையையும் செய்துவருகிறது. இதனை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே உண்ணாவிரதம், ஆர்பாட்டம், என பல்வேறு போராட்டங்களின் ஈடுபட்டுவருகின்றனர்.
"ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், விரிவாக்கம் என்கிற பெயரில் ஆட்குறைப்பு என்கிற முடிவை கைவிட வேண்டும்.” என்கின்றனர் தொழிலாளர்கள்.
மேலும், "தங்களது கோரிக்கைகளை சி.பி.சி.எல். நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றால் சென்னையில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போம்" என்கிறார்கள் தொழிலாளர்கள்.