திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பட்டி அருகே ஒரு தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்கள். அப்படி படிக்கக் கூடிய மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை செய்து வருவதாகக் கூறி கடந்த வாரம் அக்கல்லூரி மாணவிகள் சாலை மறியால் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் ஜோதி முருகனையும் அதற்குத் துணை போன வார்டன் அர்ச்சனாவையும் கைது செய்ய வலியுறுத்தினர். அதன் அடிப்டையில் தாளாளர் ஜோதி முருகன் மற்றும் வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர்.
இந்த விஷயம் ஜோதிமுருகன் காதுக்கு எட்டவே, போலீசின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் நீதிமன்றத்தில் தாளாளர் ஜோதி முருகன் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீசார் சரணடைந்த ஜோதி முருகனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
அதற்காக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஜோதிமுருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவந்து மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி புருஷோத்தமனும் பாலியல் தொல்லை தந்த ஜோதி முருகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் ஜோதி முருகனை கஸ்டடியில் வைத்து விசாரிக்க கொண்டு சென்றுள்ளனர். இந்த விசாரணையில் ஜோதி முருகன் செய்த குற்றங்கள் எல்லாம் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.