
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் உள்ள கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(64). இவரது மணி வெள்ளச்சி(47). இவர் இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண். கணவன் மனைவி இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன் மலை கரியாலூர் அடுத்த புலியன்துறை ஆனைக்காடு பங்களாவில் வசித்து வந்துள்ளனர்.
தங்கவேல் அப்பகுதியில் மர வியாபாரம் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மனைவி வெள்ளச்சியை அவரது பெற்றோரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கி வரும்படி துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து வெள்ளச்சி தனது அண்ணன் அண்ணாமலையிடம் முறையிட்டுள்ளார். இதனால் கோபமுற்ற அண்ணாமலை, மைத்துனர் தங்கவேலிடம் சென்று கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளச்சி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளச்சி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வெள்ளச்சியின் கணவர் தங்கவேல் தன் மனைவியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தங்கவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி சாந்தி, நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட தங்கவேலுக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.