அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது காசான்கோட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 94 வயது சேது மணியன், இவரது மனைவி 88 வயது கமலம். இந்த தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர். அனைவருடனும் சந்தோஷமாக ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 70 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களின் ஆறு மகன்கள், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் பெற்ற குழந்தைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறையினருடன் சந்தோஷமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சேது மணியன் கடந்த 9ஆம் தேதி இறந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சேது மணியன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் அனைவரும் அவரது மனைவி கமலத்தை அழைத்து வந்து சேது மணியன் உடல் அருகே அமர வைத்து சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது கணவரின் உடலை பார்த்து அழுது கொண்டிருந்த கமலம் திடீரென மயங்கி சரிந்தார். பதட்டம் அடைந்த அவரது பிள்ளைகள் உறவினர்கள் அவரை தூக்கிச் சென்று ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். பின்னர் சேதுமணியன் உடலை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்தனர். அதன் பிறகு உறவினர்கள், வீட்டுக்கு வந்து மயக்க நிலையில் படுக்க வைத்திருந்த கமலத்தை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதனை செய்தனர் அதில் அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அவருடைய உடலுக்கு நேற்று காலை இறுதிச் சடங்குகள் செய்து கணவர் தகனம் செய்யப்பட்ட அதே மயானத்தில் கமலத்தின் உடலையும் தகனம் செய்தனர். திருமணமாகி 70 ஆண்டுகள் ஒன்றாக இணைபிரியாத ஒற்றுமையான தம்பதிகளாக வாழ்ந்து தன் குடும்பத்து பிள்ளைகளிடமும் அப்பகுதி மக்களிடையேயும் சந்தோஷத்தோடு வாழ்ந்துள்ளனர். சேது மணியன் கமலம் தம்பதிகள் வாழ்வில் இணைந்து சாவிலும் இணைபிரியாமல் சென்றதைக் கண்டு ஊர் மக்கள் அவர்களது மன ஒற்றுமையை, ஒருவர் பிரிவை ஒருவர் தாங்கி கொள்ள முடியாத மன உறுதியைக் கண்டு வியந்து போயுள்ளனர்.