பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது அல்லி நகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது பெரியசாமி மற்றும் அவரது 48 வயது மனைவி. இவர்களது மகன் மருத்துவம் படித்துவிட்டு, பணியின் காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பெரியசாமியும், அவரது மனைவி ஆகிய இருவர் மட்டும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அல்லி நகரத்திலேயே வசித்துவந்துள்ளனர். இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் இருந்தாலும், தினசரி காலை மாலை தனது பெற்றோருடன் செல்ஃபோன் மூலம் பேசி விசாரித்துவருவது வழக்கம்.
அதன்படி நேற்று (08.06.2021) காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய், தந்தையுடன் பேசுவதற்காக செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஃபோனை எடுத்து யாரும் பேசவில்லை. மீண்டும் ஒருமுறை தொடர்புகொண்டும் அவர்கள் ஃபோனை எடுத்துப் பேசவில்லை. நீண்டநேரம் முயற்சி செய்தும் தாய், தந்தை இருவரும் பேசாததால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். தனது தாய், தந்தை இருவருமே பலமுறை ஃபோன் செய்தும் செல்ஃபோனை எடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர் அவரது தாய், தந்தை வசித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வீட்டில் பெரியசாமியும் அவரது மனைவியும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். பதறிப்போன அவர்களது உறவினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் சொல்லியதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கணவன், மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு கணவன், மனைவி இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டது குறித்து வேறு ஏதேனும் காரணம் உண்டா, கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை தெரியவில்லை. மாவட்டக் காவல்துறை அதிகாரி, தனிப்படை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறார்கள்.