பொங்கல் திருவிழாவையொட்டி, மதுரை மாவட்டம், பாலமேடுபகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15/01/2022) துவங்கியது. இப்போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இப்போட்டி மாலை 04.00 மணி வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
போட்டி துவங்குவதற்குமுன் வீரர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் முன் உறுதி மொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி சான்று, கோவிட் நெகட்டிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காளையின் உரிமையாளர், உதவியாளர் இருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி, கரோனா நெகட்டிவ் சான்று அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க இருக்கும் காளைகளுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி சுழற்சி முறையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும், 30 முதல் 40 வீரர்கள் களம் இறங்குவர். ஒவ்வொரு சுற்றில் களம் இறங்கும் வீரர்களுக்கும் வெவ்வேறு நிறங்களில் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் தரப்படும். மேலும், போட்டியில் வெல்லும் காளைகளுக்கு நாட்டு பசு மாடும் மற்றும் கன்றுக்குட்டியும் வழங்கப்படவுள்ளது. ஜல்லிக்கட்டைக் காண உள்ளூரைச் சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே போட்டியைக் காண அனுமதிக்கப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணையவழி மூலம் காணலாம்.