
ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளை விளக்கிக் கூறினார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினர்.
அப்போது 40 ஆவது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார் பேசும்போது, “40 - வது வார்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரதியார் நூலகம் உள்ளது. நூற்றாண்டு கண்ட நூலகம். இதில்தான் மகாகவி பாரதியார் 1921-ம் ஆண்டு மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் தனது இறுதி உரை ஆற்றினார். இந்தச் சிறப்புமிக்க நூலகத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சிறப்புமிக்க இடம் நீண்ட நாட்களாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை நிர்வகிப்பது, பராமரிப்பது பொதுப்பணித்துறை. அவர்களிடம் பல முறை முறையிட்டும், கடிதம் கொடுத்தும் பயனில்லை. இந்த நூலகத்தை மாநகராட்சியே நிர்வகிக்க வேண்டும் என 2-வது முறையாக கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா சாதிக் கூறும்போது, “எனது வார்டில் உள்ள குந்தவை வீதியில் உள்ள ரோடு மிகவும் குண்டு குழியுமாக மோசமாக உள்ளது. அந்த ரோட்டை உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரிகளை நீக்க வலியுறுத்தி மேயர் நாகரத்தினத்திடம் மனுக்கள் கொடுத்தனர்.