Skip to main content

முழு ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

CORONAVIRUS PREVENTION COMPLETE LOCKDOWN ANNOUNCED TN GOVT

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழக அரசு இன்று (08/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் மே 10ஆம் தேதி காலை 04.00 மணிமுதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. மளிகை, பலசரக்குகள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் ஆகியவை மதியம் 12.00 மணி வரை செயல்படும். இதை தவிர பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை. தேநீர் கடைகள் நண்பகல் 12.00 மணிவரை செயல்படலாம்; அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைப்பாதை கடைகள் நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

 

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. இன்றும், நாளையும் அனைத்துக் கடைகள், நிறுவனங்கள் இரவு 09.00 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயுமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். நியாய விலைக் கடைகள் காலை 08.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை செயல்படும். சாலையோர உணவகங்கள் செயல்பட முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கலாம்; டோர் டெலிவரிக்கு அனுமதி உள்ளது. 

 

மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை விவசாயம் சார்ந்தப் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகள் மதியம் 12.00 மணிவரை செயல்படலாம். விமானம், ரயில் ஆகியவற்றில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ - பாஸ் முறை தொடரும். இரண்டு வாரங்களுக்கு தங்கும் விடுதிகள் (HOTELS AND LODGES) செயல்பட அனுமதி இல்லை. வணிக காரணம், மருத்துவம் சார்ந்தப் பணிகளுக்காக மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடி திருத்தும் நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி, மகளிர் உரிமைத்துறை தவிர மற்ற மாநில அலுவலகங்கள் இயங்காது." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்