தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு இன்று (10/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரைகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்களில் இரவு 10.00 மணி வரை வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சித் திரையிடலாம். புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அரசு அனுமதி அளித்துளளது. திரையரங்குகளில் அனைத்து காட்சிகளிலும் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் நாளை (11/04/2021) முதல் அமலுக்கு வருகிறது." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 08.00 மணி வரை வழிபடலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.