தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு இன்று (08/04/2021) ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் சில்லறை வியாபாரக் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகளில் இரவு 11.00 மணி வரை 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும். பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அருங்காட்சியகங்களில் 50% மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் கரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (08/04/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா இரண்டாம் அலை காரணமாக முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதலை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசின் விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.