தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த விக்டோரியா மாணவர் விடுதி, 'கோவிட் கேர்' மையமாக மீண்டும் தயாராகி வருகிறது. இந்த கோவிட் கேர் மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு விக்டோரியா கோவிட் கேர் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 11 பேருக்கு பிரிட்டன் கரோனாவும், ஒருவருக்கு தென்னாப்பிரிக்கக் கரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நுண்கிருமி எப்படிப் பரவுகிறது என்பதை அறிந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்தாலே எந்த உருமாறிய கரோனாவையும் எதிர்கொள்ளலாம். பரிசோதனைகளை அதிகரித்து கரோனா பரவலைத் தடுக்க உள்ளோம். தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை.
தமிழ்நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்த ஆர்வம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை. தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்குத் தொற்று மீண்டும் வருகிறது. ஆனால் அது தீவிரமாக இருப்பதில்லை. முதல் டோஸ் முடிந்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும் போது எதிர்ப்பு சக்தி 70%- 80% அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் சித்தா கேர் மையத்தைத் திரும்பத் தொடங்க உள்ளோம்" என்றார்.