அடுத்தடுத்து நான்கு வியாபாரிகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் சேலத்தில் பிரசித்திப் பெற்ற மலர்ச் சந்தையான வஉசி பூ மார்க்கெட் மே 6ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
சேலம் மாநகரம், மாவட்டப் பகுதிகளிலும் இந்நோய்த்தொற்றால் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு முதல் தற்போதுவரை சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி என்பதால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் பிரசித்திப் பெற்ற மலர்ச் சந்தையான, சேலம் போஸ் மைதானத்தில் உள்ள வஉசி பூ மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் நான்கு பேர் அடுத்தடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
ஒரே தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருந்தால், அந்தத் தெரு மூடப்பட்டு, நோய்த்தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாக உள்ள வஉசி மார்க்கெட்டில் மலர் வியாபாரிகள் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 6ஆம் தேதி முதல் மார்க்கெட்டை மூடி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. எனினும் இது ஒரு தற்காலிக நடவடிக்கைதான் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் வஉசி பூ மார்க்கெட்டை நம்பியிருந்த வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேநேரம், நோய்த்தொற்றுக்கு உள்ளான நபர்களுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்களை உடனடியாக கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.