கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 7- ஆம் தேதி அன்று காலை 06.00 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 14- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உள்பட 38 மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் என்னென்ன தளர்வுகள்? என்பது குறித்து பார்ப்போம்!
மளிகை, காய்கறி, இறைச்சி, பூக்கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியாக செயல்படும் மளிகை, பல சரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைப்பாதைக் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படலாம்.
மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
கூட்டத்தைத் தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மீன் சந்தைகளை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் 30% பணியாளருடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து சார் பதிவு அலுவலகங்களிலும் 50% பத்திரப் பதிவுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமும் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளருடன் நிலையான வழிகாட்டு நெறிமுறையுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை தொடருகிறது.
பேருந்து போக்குவரத்து, சென்னை புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் நடமாடும் காய்கறி கடைகள் தொடர்ந்து செயல்படும்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக், சலூன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.