தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,947 ல் இருந்து 1,986 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் 3-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 204 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,076 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்பது இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் செயல்பட நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது திருச்சி மற்றும் சென்னையில் பிரசித்திபெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்கால், வாக்களியம்மன், மலைக்கோட்டை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதேபோல் சென்னையில் வடபழனி, சூளை அங்காள பரமேஸ்வரி கோவில், கந்தசாமி கோவில், படவேட்டம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி, அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.