கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,067 ஆகவும், தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 571 ஆகவும் உள்ளது. முன்னெச்சரிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையில் கரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க பல தரப்பினரும் கட்சி அலுவலகம், தங்களுக்கு சொந்தமான வீடு, ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேண்டுமென்றால் தனது கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.