ஒட்டு மொத்த தேசத்தை அச்சுறுத்தும் கரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனா முதலில் அச்சுறுத்திய மாநிலம் கேரளாவும் மகராஷ்டிராவும் தான். பின்னா் மாநிலத்துக்கு மாநிலம் பரவி தற்போது இந்தியா முமுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக ஒவ்வொரு மாநில அரசும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசுக்கு உதவிடும் வகையில் பெரிய தொழிலதிபா்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகா்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினா் நிதி உதவி செய்து வருகின்றனா். இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சினிமா துறையைச் சோ்ந்த பிரபல நடிகா்கள் கணிசமான தொகையை அரசின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனா்.
இதேபோல் கேரளாவில் கரோனாவுக்கு இரண்டு போ் பலியாகி 336 போ் பாதிக்கப்பட்டியிருக்கும் நிலையில் சினிமா பிரபலங்களைத் தவிர மற்றவா்கள் கேரளா அரசின் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனா். சினிமா பிரபலங்கள் யாரும் நிதி அளிக்க முன் வராதது பல்வேறு தரப்பினரிடமிருந்து பேச்சுக்கள் எழுந்தன.
இந்த நிலையில் மலையாள சூப்பா் ஸ்டார் மோகன்லால் கேரளா அரசின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க இருப்பதாக முதலில் அறிவித்துள்ளார். இதைத் தொடா்ந்து சினிமா துறையைச் சோ்ந்த மேலும் பலா் நிதி அளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.