கரோனா காலமாக மாறிவிட்டதால் மோசடி பேர்வழிகளும் புதிது புதிதாக யோசித்து செயல்படுகிறார்கள். ஈரோட்டில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தங்களை பத்திரிகையாளர்கள் என்றும் மாநில சங்க நிர்வாகிகள் என்றும் கூறி போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் சென்று கரோனா பிரச்சனையால் பத்திரிகையாளர்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சில டூபாக்கூர்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களிடமே சென்று லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்ட மிரண்ட எம்.எல்.ஏ.க்கள் அவ்வளவு பணம் இல்லை. உங்கள் கை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என சில ஆயிரங்களை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வரிசையில் அடுத்து நடந்த மோசடி தான் இது.
ஈரோடு சென்னிமலை ரோடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் பேசிய ஒருவர் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், ஒரு பிரபலமான நீதிபதியின் பெயரை கூறியதோடு இப்போது கரோனா வைஸுக்காக, தான் நிதி திரட்டி வருவதாகவும், உங்கள் மருத்துவமனை நிர்வாக இயக்குனரிடம் கூறி நிதியுதவி வழங்குங்கள் என கூறியிருக்கிறார்.
இதற்கு பிறகு சதீஷ்குமார் தனது மருத்துவமனை நிர்வாக இயக்குனரிடம் இந்த தகவலை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நிதி உதவியாக ஒரு லட்சம் பணம் கொடுக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு அந்த நபர் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக்கொள்ள நான் அனுப்பும் வக்கீலானான வெங்கடபதி என்பவர் வருவார் அவரிடம் பணத்தைக் கொடுங்கள் என்றும் கூறி உள்ளார்.
நேற்று அந்த மருத்துவமனைக்கு 3 நபர்கள் வந்து சதீஷ்குமாரிடம், தாங்கள் ஓய்வுபெற்ற நீதிபதியால் அனுப்பப்பட்டவர்கள் என, தங்களின் பெயர் என்று வக்கீல் வெங்கடபதி, கிருஷ்ணமூர்த்தி, கிரிஷ் குமார் ஆகியவற்றை கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் சதீஷ்குமார் மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து திரட்டிய ரூபாய் 50 ஆயிரம் மற்றும் மருத்துவ நிர்வாக இயக்குனர் கொடுத்த ரூ. 50 ஆயிரம் என ரூபாய் ஒரு லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தார்.
அப்போது அவர்களிடம் தன்னிடம் போனில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி இப்போது எந்த ஊரில் இருக்கிறார் என்பது குறித்து அவர்களிடம் சதீஷ்குமார் பேசியுள்ளார். பிறகு நீதிபதிக்கு நன்றி தெரிவித்து போன் செய்வதாக கூறி சதீஸ்குமார் போன் செய்தவுடன் அந்த நபர்களில் உள்ள ஒருவனின் செல்போன் ரிங்காகியுள்ளது. சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் பேசியுள்ளார். அதற்கு அந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால், இது டூபாக்கூர் ஆசாமிகள் என்பதை உணர்ந்த சதீஷ்குமார் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த மூவரும் சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். சதீஷ்குமார் மற்றும் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் பிடித்து வைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசார் அங்கு வந்து மூன்று பேர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் மீதும் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து கரோனா நிதியாக கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கால மாறுதலுக்கு தகுந்தாற்போல் டூபாக்கூர்களும், பிளாக்மெயில் பேர்வழிகளும் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.